தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 80 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 80 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-02-12 22:47 GMT

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்ட வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் புகுந்து முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.

வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரங்களில் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இதனிடையே சானமாவு வனப்பகுதியில் நேற்று முன்தினம் 80 யானைகள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தீவிர நடவடிக்கை

இதையடுத்து சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 80 யானைகளையும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர். தேன்கனிக்கோட்டை வனச்சரகம் பேவனத்தம் வனப்பகுதி சூரப்பன் குட்டை என்ற பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள் பாலேகுளி, திம்மசந்திரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.

இந்த நிலையில் நேற்று காலை 40 பேர் கொண்ட வனக்குழுவினர் சூரப்பன்குட்டையில் இருந்து யானைகளை திம்மசந்திரம், நொகனூர் வனப்பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள், விவசாயிகள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்