ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் 8 பவுன் தாலி செயின் பறிப்பு

குடியாத்தத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் 8 பவுன்தாலி செயினை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-19 17:01 GMT

குடியாத்தத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் 8 பவுன்தாலி செயினை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பவுன் தாலி செயின் பறிப்பு

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகரை அடுத்த ஜெய்னநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பி.எச்.இமகிரிபாபு. அ.தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி செயலாளராகவும், குடியாத்தம் நில வங்கி தலைவராகவும், அப்பகுதி ஒன்றியக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி மமதா (வயது 40). ராஜாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவரான இவர், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் ஊராட்சி மன்ற தலைவர் மமதா தனது வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் மமதா அருகே வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்.

வாகன சோதனை

இதனால்அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் ஹெல்மெட் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவியிடம் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்