கோவையில் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின
நொய்யல் ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின.
நொய்யல் ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 8 குளங்கள் முழுமையாக நிரம்பின.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் பருவமழை பெய்யாமல் ஏமாற்றியது. ஆனால் கடந்த மாதம் (ஜூலை) மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைஒட்டிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவி, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவையின் முக்கிய ஆறாக விளங்கும் நொய்யல் ஆற்றில் கடந்த 1-ந் தேதி முதல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது பேரூர் படித்துறையை தொட்டபடி நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
கடல் போல் காட்சி அளிக்கிறது
நொய்யலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றோரத்தில் உள்ள தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு உள்ளிட்ட விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. அங்கு தற்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதற்கிடையே நொய்யல் ஆற்று நீர் வாய்க்கால்கள் மூலம் குளங் களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் குறிச்சிகுளம், புதுக்குளம், கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம் உள்பட 7 குளங்கள் முழுமையாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கின்றன.
அதிகாரிகள் எச்சரிக்கை
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து கோவை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நொய்யல் ஆற்று வழித்தடத்தில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடந்த 1-ந் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 1,450 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
நிரம்பி விடும்
இந்த தண்ணீர் ஆற்றின் வழியோரம் உள்ள குளங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் புதுக்குளம், கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், குறிச்சிகுளம், வெள்ளலூர் குளம், உக்குளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம் ஆகிய குளங்கள் முழுமை யாக நிரம்பி விட்டன. பேரூர் பெரியகுளம் 95 சதவீதம் அளவிற்கு நிரம்பி உள்ளது. செங்குளத்தில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது.