யானை தந்தங்களை விற்க முயன்ற 8 பேர் கைது
கொடைக்கானலில் யானை தந்தங்களை விற்க முயன்ற கேரள வாலிபர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.;
யானை தந்தங்கள்
கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்ய உள்ளதாக வனத்துறை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இதுகுறித்து அவர்கள் கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின்பேரில் வன சரகர் சிவக்குமார், பழனி வனவர்கள் அழகுராஜா, கார்த்திக் ஆகியோர் கொண்ட வனத்துறை தனிப்படையினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் வனத்துறை தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கேரள மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் பெருமாள்மலை பகுதியில் அடிக்கடி உலா வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கார் பின்னால் ரகசியமாக பின்தொடர்ந்தனர். அப்போது அந்த கார் பெருமாள்மலை அருகே பாலமலை கிராமத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றது. மேலும் அந்த காரை தொடர்ந்து பின்னால் மதுரை பதிவெண் கொண்ட மற்றொரு காரும் வந்தது. அப்போது மதுரை காரில் வந்தவர்கள் யானை தந்தங்களை கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள், யானை தந்தங்களை கேரள காரில் வந்தவர்களிடம் விற்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
8 பேர் கைது
உடனே வனத்துறை தனிப்படையினர் அங்கிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள், காரைக்குடியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 29), மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த பிரகாஷ் (24), சந்திரன் (40), கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சிபின் தாமஸ் (26), மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரசீத் (47), கொடைக்கானல் கல்லறைமேட்டை சேர்ந்த சுதாகர் (40), பெருமாள்மலையை சேர்ந்த ஜோசப் சேவியர் (44), பட்டிவீரன்பட்டி அண்ணாநகரை சேர்ந்த பிரபாகர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 8 பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள், 2 சொகுசு கார்கள், நாட்டு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததால் அவர்கள், யானையை வேட்டையாடி தந்தங்களை எடுத்து வந்தார்களா? என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.