தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் துணைத்தலைவர் அருளானந்தசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது வருமாறு:-
அறிவுடைசெல்வன்:- மருங்குளத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகாலில் சாக்கடை நீர் தேங்கி கொசுதொல்லை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரேமா சாமி.சரவணன் (தி.மு.க.) :- விளார் பகுதியில் பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது. சாலை வசதி சீர் செய்து தர வேண்டும். குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்சகாயகுமார்:- சாலை பணிகளுக்கு பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 1 ஆண்டுக்குமேல் ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மழைக்காலம் வருமுன்பு நிதி ஒதுக்கவேண்டும்.
துணைத்தலைவர் அருளானந்தசாமி:- மழைகாலத்திற்கு முன்பு சாலைகளை சீரமைக்க ஒவ்வொரு கவுன்சிலரும் ரூ.8 லட்சம் மதிப்பில் பணிகளை தேர்வு செய்து தலைவரிடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவானந்தம் நன்றி கூறினார்.