8½ லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்

Update: 2023-08-12 10:39 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8½ லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை தேசிய குடற்புழு நீக்க நாளான வருகிற 17-ந் தேதி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய குடற்புழு நீக்க நாள்

தேசிய குடற்புழு நீக்க நாள் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட சோல்) வழங்கப்பட உள்ளது.

இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தி குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

பள்ளிக்கு வருவது அதிகரிக்கும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 49 ஆயிரத்து 159 குழந்தைகளுக்கும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 524 பெண்களுக்கும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது.

இதில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள், சமூக நலத்துறை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து துறைகளை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்