8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் தொடரும் தனிப்படையினரின் நடவடிக்கையினால் 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-20 18:14 GMT

தனிப்படை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் உள்ள போலீசார் ஆங்காங்கே ரகசிய கண்காணிப்பு மற்றும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பதுக்கி வைக்கப்படும் புகையிலை பொருட்கள், கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களையும் பிடித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து அந்தந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகரில் ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர். கடந்த 2 மாதங்களில் ரூ.48 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

8 கிலோ புகையிலை பொருட்கள்

இந்த நிலையில் வல்லாத்திராகோட்டை பகுதியில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் விரைந்து சென்று அந்த கடையில் சோதனையிட்டனர்.

மேலும் 8 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வல்லாத்திராகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வல்லாத்திராகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தனிப்படையினர் தொடர்ந்து தங்களது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்