8 அரசு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு
8 அரசு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு
நாகை மாவட்டத்தில் சிறந்த சமூக தொண்டாற்றி வரும் 8 அரசு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பரிசினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசு பணியாளர்களுக்கு நினைவு பரிசு
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசு துறையை சேர்ந்த 8 பணியாளர்கள் மற்றும் 4 தொண்டு நிறுவன நிர்வாகிகளை பாராட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
அதன்படி சிறந்த சமூக சேவையாற்றி வரும் அரசுத்துறை பணியாளர்களான நாகை நகராட்சி தூய்மை பணியாளர் ஜெயராமன் (கழீவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து கொசுமருந்து தெளிக்கும் பணிசிறப்பாக செய்தல்), ஏனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய துணை செவிலியர் காந்திமதி(அதிக பிரசவங்களை கையாண்டு தாய் மற்றும் சிசு இறப்பின்றி மகப்பேறு பணிகளை சிறப்பாக செய்தல்) ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு
ஊட்டச்சத்து
மேலும் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை குழந்தைகள் மைய உதவியாளர் முருகேஸ்வரி(குழந்தைகளை மையத்திற்கு அழைத்து வருவதோடு அங்குள்ள 30 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை சரியான நேரத்தில் அளித்து தனி கவனம் செலுத்துதல்) தெத்தி, நிஜாம் காலனி அங்கன்வாடி பணியாளர் சம்சத்பேகம்(குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தருவதோடு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மையத்தை பராமரித்து, அங்குள்ள 15 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை சரியான நேரத்தில் அளித்து தனி கவனம் செலுத்துதல்) ஆகியோருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வேதாரண்யம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மண்டல அலுவலக மீன்வள மேற்பார்வையாளர் விக்னேஷ்வர்(படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த புஷ்பவனம் மற்றும் நாலுவேதபதி கிராமங்களை சேர்ந்த 3 மீனவர்களை படகில் சென்று காப்பாற்றியது, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் காயமடையும்போது அவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை சிறப்பாக செய்தல்), நாகை தாலுகா புத்தாகரம் கிராம உதவியாளர் சேகர்(விடுப்பு எடுக்காமல் அனைத்து பணி நாட்களிலும் சிறந்த முறையில் பணியாற்றுதல்) ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
சிறுமியை மீட்டல்
கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் விக்னேஷ் (உண்டியல் திருடர்கள், எரிசாராயம் கடத்தியர்களை துரத்தி பிடித்தல், திருட்டு, மோதல் சம்பம் நடைபெறாமல் தடுத்தல்) தலைஞாயிறு தீயணைப்பு நிலைய டிரைவர் அய்யாதுரை(நீர்முளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கழிவறை கோப்பைக்குள் சிக்கிக்கொண்ட தாஷிகா என்ற 8 வயது சிறுமியை பத்திரமாக மீட்டல்) ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் நாகை ராஜேந்திரன்(ஆதரவின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை தனது சொந்த செலவில் ஈமச்சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்தல்), வள்ளலார் தருமச்சாலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வேதாரண்யம் நகராட்சி குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினருமான வெற்றியழகன்(மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியவர்களுக்கு தினசரி மூலிகை கஞ்சி வழங்குவது மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக பணி மேற்கொள்ளுதல்) ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
தொண்டு நிறுவனங்கள்
வேதாரண்யம், ஈகா அறக்கட்டளையின் நிர்வாகி மோகன ராஜசேகரன் (தாய், தந்தை இல்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது, முதியோர் இல்லம் நடத்தி வருதல், நலிந்த மக்கள் அறுவை சிகிச்சைக்கு உதவுதல்) வேளாங்கண்ணி உதவிக்கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகி ஆண்டனி பிராங்க்ளின் ஜெயராஜ்(தினமும் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்குவது, கடற்கரையில் உதவிக்கரங்கள் கடல் மீட்பு குழுவினர் மூலம் கடலில் மூழ்கி தத்தளிக்கும் நபர்களை மீட்க உதவி செய்தல்) ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.