5,580 சோலார் பேனல்கள் தருவதாக ஆர்டர் பெற்று ரூ.8¾ கோடி மோசடி

5,580 சோலார் பேனல்கள் தருவதாக ஆர்டர் பெற்று ரூ.8¾ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-09 21:15 GMT

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சோலார் பேனல்கள்

சென்னை அரும்பாக்கம் ஜெகநாதநகரில் ரெமோன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சூரிய மின்சக்தி தொழிற்சாலைகளின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான வணிகம் செய்து வருகிறது. மேலும் சூரிய மின் நிலையங்களையும் நிறுவிக்கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் இயக்குனராக திருச்சி மாவட்டம் முசிறி மூவனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் உள்ளார். இந்த நிறுவனத்தின் திட்டத்தளம் முசிறி மூவனூரில் உள்ளது. இந்தநிலையில் புதிய திட்டம் ஒன்றுக்காக கடந்த 2022-ம் ஆண்டு இவர்களுக்கு ஆயிரக்கணக்கான சோலார் பேனல்கள் தேவைப்பட்டது.

ஐதராபாத் நிறுவனம்

இதற்காக சோலார் பேனல் உற்பத்தியாளரையும், வினியோகஸ்தரையும் ஸ்ரீனிவாஸ் தேடியுள்ளார். அப்போது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் திலக்நகர் புதிய நல்லகுண்டா பகுதியில் செயல்பட்டு வரும் ஓனிக்ஸ் சிரி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஷிரிஷாபொலு, அவருடைய கணவர் பவன்குமார் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் ஸ்ரீனிவாசை அணுகி உள்ளனர்.

அவர்கள், தங்களிடம் சீன நிறுவனத்தின் 5,580 சோலார் பேனல்கள், தங்களுக்கு சொந்தமான சென்னை மணலியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு பேனல் விலை (ஜி.எஸ்.டி. தவிர்த்து) ரூ.15,450.75 என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஜி.எஸ்.டி. மற்றும் சரக்கு அனுப்பும் கட்டணம் எல்லாம் சேர்த்து ரூ.9 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 300 செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

5,580 பேனல்களுக்கு ஆர்டர்

உடனே ஸ்ரீனிவாஸ், தங்களுக்கு சோலார் பேனல்கள் அவசரமாக தேவைப்படுகிறது. எனவே அவற்றை நேரில் பார்த்து, அவை புதிய பேனல்களா? தரமானவையா? தங்களுக்கு வினியோகம் செய்யும் அளவுக்கு பேனல்கள் இருப்பு உள்ளனவா? என்று ஆய்வு செய்துவிட்டு ஆர்டர் கொடுப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரெமோன் சொல்யூஷன்ஸ் நிறுவன ஊழியர் சதீஷ் என்பவரை அந்த குடோனுக்கு ஸ்ரீனிவாஸ் அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு ஐதராபாத் நிறுவன பிரதிநிதி செல்வகணேஷ், சோலார் பேனல் இருப்புகளை காண்பித்துள்ளார். அத்துடன், அவற்றையே உங்களுக்கு வினியோகம் செய்ய இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி ஸ்ரீனிவாஸ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி 5,580 சோலார் பேனல்களை 3 நாட்களில் முசிறியில் உள்ள நிறுவனத்துக்கு வழங்கும்படி ஆர்டர் கொடுத்தார்.

ரூ.8¾ கோடி மோசடி

அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, அந்த சோலார் பேனல்களுக்குரிய விலையான ரூ.9 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரத்து 7-ஐ ஷிரிஷாபொலுவின் ஐதராபாத்தில் உள்ள வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி சோலார் பேனலை 5 நாட்கள் கடந்தும் அனுப்பவில்லை.

இதனால் ஸ்ரீனிவாஸ், நான் கேட்டபடி சோலார் பேனல்களை வழங்குங்கள் அல்லது நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கூறியுள்ளார். உடனே ஷிரிஷாபொலு ரூ.88 லட்சத்து 55 ஆயிரத்து 683 மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதம் ரூ.8 கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 324-ஐ அவர்கள் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர்.

3 பேர் மீது வழக்கு

இதுபற்றி ஷிரிஷாபொலு-பவன்குமார் தம்பதியிடம் கேட்டதற்கு அவர்கள், ஸ்ரீனிவாசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஸ்ரீனிவாஸ் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ஷிரிஷாபொலு-பவன்குமார் தம்பதி மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்