தனியார் மதுபான பார் ஊழியரை தாக்கி பணம் பறித்த 8 பேர் கைது

தனியார் மதுபான பார் ஊழியரை தாக்கி பணம் பறித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-06-10 21:00 GMT


மதுரை புதூர் விஸ்வநாதன்நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 42), தனியார் மதுபான பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை இவர் காந்தி மியூசியம் ரோட்டில் உலக தமிழ்ச்சங்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். அதை தொடர்ந்து மேலும் 5 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் செந்தில்வேலை கத்தியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவரை தாக்கி அவரிடமிருந்து 15 ஆயிரம் ரூபாயை பறித்தனர். உடனே செந்தில்வேல் சத்தம் போட அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் விரைந்து வந்தனர். அவர்களையும் 8 பேர் கத்தியை காட்டி மிரட்டி, 3 மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த செந்தில்வேல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார்.

அதில் தனது குழந்தையின் படிப்பு செலவிற்காக வாங்கி வந்த பணத்தை 8 பேர் கொண்ட கும்பல் பறித்து கொண்டு தப்பியதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இது தொடர்பாக திருமங்கலம் விடத்தக்குளம் கவியரசன் (வயது 23), பீ.பி.குளம் சதீஸ்குமார் (24), செல்லூர் ஜீவாரோடு பூபதிராகவேந்திரன் (20), பனங்காடி பார்த்தசாரதி (21), பீ.பி.குளம் ராம்குமார் (26), ஆழ்வார்புரம் மீனாட்சிசுந்தரம் (23), செல்லூர் ஜீவாரோடு தம்பிராஜ் (19), கோரிப்பாளையம் ரிஷிகுமார் (19) என்பதும், அவர்கள் அனைவரும் பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் தல்லாகுளம் பகுதியில் பதுங்கியிருந்த அந்த 8 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்