7-ம் ஆண்டு நினைவு நாள் அப்துல் கலாம் நினைவிடத்தில் திரளானோர் மலர் தூவி மரியாதை
7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அப்துல் கலாம் நினைவிடத்தில் அரசு அதிகாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமேசுவரம்,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலக புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல் கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
இன்று அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளாலும், அவரது சமாதி மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இன்றுகாலை அங்கு வந்த அப்துல் கலாம் குடும்பத்தினர் நினைவிடத்தில் சிறப்பு தொழுகை நடத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அப்துல் கலாமின் பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத், அண்ணன் மகள் நசிமா மரைக்காயர் மற்றும் ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் அப்துல் கலாம் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
நினைவு நாளையொட்டி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், 'இளைய சமுதாயத்தினரிடம் புது எழுச்சியையும், நம்பிக்கையையும் விதைத்த ஏவுகணை நாயகரின் கனவை நனவாக்க உழைத்திடுவோம்' என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழினத்தின் அறிவியல் அடையாளம் அப்துல் கலாமின் நினைவை போற்றுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்திய இளைஞர்களுக்காக, 2011-ம் ஆண்டில் ஊழலை ஒழிக்க 'நான் என்ன தர முடியும்' என்ற இயக்கத்தை தொடங்கினீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக வணங்குகிறேன். வாழ்த்துங்கள். வழிகாட்டுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அப்துல் கலாமுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.