சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.78 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றபிறகு, சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் ஒரு இருக்கைக்கு அடியில் மர்ம பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த பையை சோதனை செய்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து இருப்பது தெரிந்தது. அதில் இருந்த ரூ.78 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 598 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பயணி, சுங்க இலாகா சோதனைக்கு பயந்து அதனை விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு சென்றது தெரிந்தது. அந்த தங்கத்தை கடத்தி வந்து, இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து சென்றது யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.