வேகவதி ஆற்றின் கரையோரத்தில் வசித்து வந்த 78 குடும்பத்தினர் கீழ்கதிர்பூரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறியுள்ளனர் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

வேகவதி ஆற்றின் கரையோரத்தில் வசித்து வந்த 78 குடும்பத்தினர் கீழ்கதிர்பூரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறியுள்ளனர் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-23 09:00 GMT

1,406 ஆக்கிரமிப்பு வீடுகள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் நகரத்தில் வேகவதி ஆற்றின் கரையோரங்களில் 1,406 ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டன. இந்த வீடுகளில், 2015-ம் ஆண்டு் வெள்ளம் புகுந்து பலர் பாதிப்புக்குள்ளானார்கள். அதேபோல, தொடர்ந்து மழைக்காலங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த வீடுகளை அகற்றி ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்ய 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.200 கோடி மதிப்பில் கீழ்கதிர்பூர் கிராமத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

78 குடும்பத்தினர்

இதில் கணக்கீடு செய்யப்பட்ட 1,406 குடும்பங்களில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க பணம் செலுத்திய 572 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, 572 குடும்பங்களில் 78 குடும்பத்தினர் கீழ்கதிர்பூரில் தற்போது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறியுள்ளனர். மீதமுள்ள குடும்பத்தினர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்