75-வது சுதந்திர தின விழா: தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட்டம்
75-வது சுதந்திர தின விழாவானது தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
சென்னை,
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.
விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் சேகர்பாபு, வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தேசியக்கொடி ஏற்றினார். இதில், பெங்களூரு புகழேந்தி, சைதாப்பேட்டை எம்.எம்.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, திருப்பதி நாராயணன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு, மாநில செயற்குழு உறுப்பினர் காயத்ரி தேவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 150 அடி உயர கொடிக்கம்பத்தில் பிரமாண்ட தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
75-வது சுதந்திர தினத்தயொட்டி காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்டம் தோறும் 75 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து அண்ணா சாலையில் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலை வரை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஊர்வலம் சென்றனர்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் 1 கி.மீ. நீளம் மற்றும் 15 அடி அகலம் கொண்ட தேசியக்கொடியை காங்கிரஸ் கட்சியினர் தாங்கிய படி காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை கோஷம் எழுப்பியவாறு ஊர்வலம் சென்றனர்.
பின்னர், ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசியக்கொடி ஏற்றினார். இதில் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க-ம.நீ.ம.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் கட்சியின் துணைத்தலைவர் மாறன் என்கிற வேணுகோபால் தேசியக்கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து, சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் உள்ள டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஜி.கே.வாசன் புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேசியக்கொடி ஏற்றினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசனும், சென்னை திருவெற்றியூரில் உள்ள சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணனும், சென்னை அசோக் நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலனும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.