75-வது சுதந்திர தின விழா; 75 பைசாவுக்கு பிரியாணி - அலைமோதிய மக்கள் கூட்டம்...!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பைசாவுக்கு பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

Update: 2022-08-15 09:26 GMT

தஞ்சாவூர்,

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் தஞ்சை ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பு சலுகையாக இன்று பிரியாணி வாங்க வரும் முதல் 75 நபர்களுக்கு 75 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு சலுகையை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் இன்று காலை முதலே அந்த ஓட்டலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த ஓட்டலில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பொதுமக்கள் பழைய நாணயங்களை சேகரித்து கொண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி பார்சல்களை வாங்கி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்