75.52 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுத்து புதிய சாதனை

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 75.52 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் 9 மாதங்களில் ரூ.474 கோடி நிகர லாபத்தையும் பெற்றுள்ளது.

Update: 2023-02-14 18:45 GMT

நெய்வேலி:

1.4.2022 முதல் 31.12.2022 வரையிலான நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் 9 மாதங்கள் மற்றும் 3-வது காலாண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிவிப்பதற்காக அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனியாகவும், அதன் துணை நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்துடன் இணைந்து ஒட்டுமொத்தமாகவும் மேற்கொண்ட உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

நிலக்கரி உற்பத்தியில்புதிய சாதனை

31.12.2022 அன்றுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 75.52 லட்சம் டன் நிலக்கரியை வெட்டி எடுத்து, நிறுவன வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது, கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் இதே காலத்தில் பதிவு செய்த நிலக்கரி அளவான 40.83 லட்சம் டன்னைவிட 84.96 சதவீதம் அதிகமாகும். அதுபோன்று, கடந்த 2021-22-ம் ஆண்டு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வெட்டியெடுக்கப்பட்ட 165.92 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை விட 3.72 சதவீதம் அதிகமாக, இவ்வாண்டு 172.09 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை இந்நிறுவனம் வெட்டியெடுத்துள்ளது.

மின்சக்தி ஏற்றுமதியில் வளர்ச்சி

9 மாதங்களில் 1823 கோடியே 88 லட்சம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது. துணை நிறுவனத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் 2007 கோடியே 83 லட்சம் யூனிட்டை, மின்வாரியங்களுக்கு ஏற்றுமதி செய்து, முந்தைய 2021-22 -ம் ஆண்டின், இதே கால அளவில் மேற்கொண்ட 1924 கோடியே 80 லட்சம் யூனிட்டை விட, 4.31 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்துடன் இணைந்து ரூ.11,031 கோடியை இயக்கத்தின் மூலம் வருவாயாகப் பெற்றுள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மட்டும் நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.8,659 கோடியை இயக்கத்தின் மூலம் வருவாயாக பெற்றுள்ளது.

ரூ.11 ஆயிரம் கோடியை கடந்த வர்த்தகம்

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்துடன் இணைந்து ரூ.11,528 கோடியை மொத்த வருவாயாகப் பெற்றுள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மட்டும் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.9,161 கோடியை மொத்த வருவாயாகப் பெற்றுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய தொகையான ரூ.7,887 கோடியை விட, இது 16 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை விலையால் லாபத்தில் தாக்கம்

31.12.2022 அன்றுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனம் ரூ.474 கோடியை, நிகர லாபமாக பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் பெற்ற நிகர லாபம், ரூ.797 கோடியாகும்.

அதுபோன்று, 31.12.2022 அன்றுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், தனது துணை நிறுவனத்துடன் இணைந்து, இந்நிறுவனம் ரூ. 590 கோடியை, நிகர லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் பெற்ற நிகர லாபம், ரூ.784 கோடியாகும்.

இந்நிறுவனம், 2022-23ம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக, செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் 15 சதவிகிதத்தை அறிவித்துள்ளது.

இந்த தகவல் என்.எல்.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்