754 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
தியாகதுருகம் பகுதி பள்ளிகளில் 754 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.;
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா நாராயணசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு 71 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எத்திராசு, நகரசெயலாளர் மலையரசன், ஒன்றிய அவைத்தலைவர்கள் சாமிதுரை, நூர்முகமது, மாவட்ட பிரதிநிதிகள் மடம் பெருமாள், சுப்பு. இளங்கோவன், நெடுஞ்செழியன், அப்துல் கபூர், பாலு, ஒன்றிய பொருளாளர் மணிசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமார், செல்லம்மாள் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள் நிர்வாகிகள் கோவிந்தராஜ், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து எஸ்.ஒகையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி முன்னிலையில் 140 மாணவ, மாணவிகளுக்கும், விருகாவூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 74 மாணவ,மாணவிகளுக்கும், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள் முன்னிலையில் 188 மாணவ, மாணவிகளுக்கும், நாகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 278 மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் முன்னிலையிலும் விலையில்லா சைக்கிள்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார். இதன் மூலம் மொத்தம் ரூ.38 லட்சத்து 41 ஆயிரத்து 630 மதிப்பில் 754 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.