பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கில் 73 வீட்டுமனைகள் ஏலம்

பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கில் 73 வீட்டுமனைகள் ஏலம் நடந்தது.

Update: 2023-03-09 18:45 GMT

பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கில் 73 வீட்டுமனைகள் ஏலம் நடந்தது.

நிதி நிறுவன மோசடி வழக்கு

கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு பைன் பியூச்சர் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை செந்தில்குமார் (வயது 45), விவேக் (34) ஆகியோர் தொடங்கினர்.

இவர்கள் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் கோவை பொருளாதார போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் 25,389 பேரிடம் ரூ.189 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் செந்தில் குமார், விவேக் ஆகியோரை கடந்த 2013-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விவேக்கின் சகோதரர் நித்யானந்தன் கைது செய்யப்பட்டார்.

வீட்டுமனைகள் ஏலம்

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த வழக்கில் அன்னூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 73 வீட்டுமனைகள் ஏலம் விடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் அவற்றின் ஏலம் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் தலைமையில் நடந்தது. இதற்கிடையே ஏலம் நடத்தக்கூடாது என்று 4 பேர் வருவாய் அதிகாரி லீலா அலெக்சிடம் மனு அளித்தனர்.

இருந்தபோதிலும் கோர்ட்டு உத்தரவுப்படி தான் ஏலம் நடத்தப்படுகிறது என்று பதில் அளித்துவிட்டு ஏலத்தை தொடந்தார்.

இதில் ரூ.1.37 கோடி அடிப்படை நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் ஒருவர் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்