நீலகிரியில் 722 சைபர் குற்ற வழக்குகள் பதிவு

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 722 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-10 18:45 GMT

ஊட்டி,

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 722 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சைபர் குற்றங்கள்

21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப புரட்சி அதிகரித்தாலும், ஒருபுறம் இணையவழி குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் இரு மடங்கு அதிகமாகி விட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பார்முலாவை பின்பற்றி மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றுவார்கள்.

சைபர் குற்றங்களை பொறுத்தவரை 70 சதவீதம் பேர் துணிந்து வந்து தைரியமாக புகார் அளிப்பது இல்லை. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் இரு மடங்காக அதிகரித்து உள்ளது. நீலகிரியில் கடந்த 2021-ம் ஆண்டு 430 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 54 ஆயிரத்து 804 ரூபாய் மோசடி செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கிகளில் இருந்து ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 768 முடக்கப்பட்டது. மேலும் இதில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 870 புகார்தாரர்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.

722 வழக்குகள் பதிவு

இதுகுறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் கூறியதாவது:-

கடந்த ஆண்டு 722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.3 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 658 பணம் மோசடி செய்யப்பட்டது. இதில் ரூ.2 கோடியே 28 லட்சத்து 41 ஆயிரத்து 512 வங்கியில் முடக்கப்பட்டு, ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 360 உரியவர்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளது.

சைபர் குற்றங்களில் அதிகம் படித்தவர்கள் முதலில் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து ஓய்வூதியம் வாங்கும் வயதானவர்கள் மோசடி ஆசாமிகளால் குறி வைக்கப்படுகின்றனர்.

ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டால் கால தாமதம் செய்யாமல் அடுத்த 72 மணி நேரத்திற்குள் போலீசாரிடம் நேரில் புகார் அளித்தாலோ அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளித்தாலோ மோசடி பணத்தை வங்கியில் இருந்து முடக்கி திரும்பி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்