முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நிறைவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நிறைவுபெற்றது. லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி அவரது 70 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை எடுத்துக்கூறும் வகையில் 'எங்கள் முதல்வன் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.
இந்த புகைப்பட கண்காட்சியில், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சித்ரவதையை அனுபவித்ததை சித்தரிக்கும் மாதிரி சிறை, பல்வேறு தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை நாள்தோறும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
லட்சத்துக்கும் மேற்பட்டோர்
மொத்தம் 13 நாட்கள் நடந்த புகைப்படக் கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் மதிவேந்தன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். குறிப்பாக, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை முதலே வருகை தந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்த்தனர்.
அதேபோல், மிசா நேரத்தில் மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்டு இருந்ததை சித்தரிக்கும் மாதிரி சிறை முன்பாகவும், மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது போன்று அமைக்கப்பட்டிருந்த சிலை உடனும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர். 13 நாளில் இந்த புகைப்பட கண்காட்சியை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.