சிமெண்டு ஆலை அதிகாரிகள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை

சிமெண்டு ஆலை அதிகாரிகள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது.;

Update:2023-02-07 01:39 IST

செந்துறை:

அலுவலர்கள் குடியிருப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆலத்தியூரில் ராம்கோ சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளர்களாக சுதர்சன், நாராயணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும், அந்த ஆலையில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளும் அப்பகுதியில் உள்ள சிமெண்டு ஆலை அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமண நாளையொட்டி சுதர்சன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டார். இதேபோல் நாராயணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.

நகை-பணம் கொள்ளை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர்கள், அடுத்தடுத்து மொத்தம் 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், சுதர்சன் வீட்டில் இருந்த 57 பவுன் நகைகளையும், நாராயணன் வீட்டில் இருந்த 13 பவுன் நகைகளையும், மற்ற 6 வீடுகளிலும் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் குடியிருப்பு வளாகத்தை சுற்றி ஓடி வந்து படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் போன்றவர்களையே பல கட்ட சோதனை செய்யும் சிமெண்டு ஆலையின் செக்யூரிட்டி சிஸ்டத்தை மீறி எப்படி திருடர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்துவிட்டு, தப்பி சென்றனர் என்பது பற்றியும், மொத்தம் எவ்வளவு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்