வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை

சென்னை வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-09-22 21:54 GMT

வில்லிவாக்கம்,

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் சோழன்(வயது 66). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வனஜா(60). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சோழன்-வனஜா மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கணவன்-மனைவி இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். வனஜா கதவை திறந்தார்.

அப்போது வீட்டின் வெளியே மங்கி குல்லா, ஹெல்மெட் அணிந்தபடியும், கையில் கத்தியுடனும் 5 பேர் கொண்ட கும்பல் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை கும்பல் சத்தம் போடக்கூடாது என கத்தியை காட்டி மிரட்டியபடி வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் சோழன், வனஜா இருவரையும் கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து திணித்து கீழே படுக்க வைத்தனர்.

70 பவுன் நகை கொள்ளை

பின்னர் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள், வனஜா அணிந்திருந்த தாலி சங்கிலி என மொத்தம் 70 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ஆகியவற்றை கத்திமுனையில் கொள்ளையடித்து விட்டு முகமூடி கும்பல் தப்பிச்சென்று விட்டது. அப்போது வனஜா, தனது தாலி சங்கிலியை மட்டுமாவது தந்துவிடுமாறு கொள்ளையர்களிடம் கெஞ்சினார். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் தப்பி ஓடிவிட்டனர்.

அதன்பிறகு சோழன் கையில் இருந்த கட்டை மெதுவாக அவிழ்த்து வெளியில் வந்து சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வனஜாவை மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வயதான தம்பதியிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

தெரிந்தவர்களே கைவரிசையா?

வயதான தம்பதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கொள்ளை கும்பல் வீடு புகுந்து நகை, பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். எனவே அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொளளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ேபாலீசார் ஆராய்ந்து வருகின்றனர். சோழன் கட்டிட மேஸ்திரி என்பதால் தன்னிடம் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை வீட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்