தனியார் கம்பெனி ஊழியரிடம் வழிப்பறி: 7 வாலிபர்கள் கைது
தனியார் கம்பெனி ஊழியரிடம் வழிப்பறி செய்த 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்
சேலம் தென் அழகாபுரத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 40). தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமராஜன் வேலை விஷயமாக ஆத்தூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், அறை எடுத்து தங்கி இருந்தார். வேலை முடிந்த பிறகு அவர் சாப்பிட வெளியே சென்றார். அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அவர்கள் ராமராஜனை மிரட்டி, மடிக்கணினி, செல்போன், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர். இதுகுறித்து ராமராஜன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஆத்தூர் கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (24), ஜீவா (21), ஆனந்த் (27), அன்புமணி (19), மாரிமுத்து (23), உடையார்பாளையத்தை சேர்ந்த ஹரிகரன் (20), திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சந்தோஷ் (22) ஆகியோர் ராமராஜனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் இரவு நேரங்களில் தனியாக வரும் நபர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மடிக்கணினி, செல்போன் மீட்கப்பட்டது.