பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர். அந்த பகுதியில் தையல் கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி ஜெசிந்தா. இவர், கடந்த 3.2.2021 அன்று தனது கணவரின் தையல் கடைக்கு தனியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், ஜெசிந்தா கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெசிந்தாவிடம் நகை பறித்த, மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் கூடுதல் சப்-கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ராமச்சந்திரன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.