நிலத்தின் உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை

மின்வேலியில் சிக்கி தாய்- மகன் இறந்த வழக்கில் நிலத்தின் உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-02-27 19:42 GMT

விழுப்புரம் அருகே உள்ள கொங்கராயனூர் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி பேபி (வயது 43). இவர் தனது மகன் எழில்குமார் (18) என்பவருடன் கடந்த 26.7.2017 அன்று இரவு அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மறுநாள் வெகுநேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சாமிநாதன் மகன் பிரசாந்த் மற்றும் உறவினர்கள், அவர்களது நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பேபியும், எழில்குமாரும் கரும்பு தோட்டத்தில் இறந்து கிடந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், பாபு ஆகியோர் தங்களது நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மின் வேலி அமைத்து இருந்ததும், அதை அறியாத பேபி, எழில்குமார் ஆகியோர் அந்த மின்வேலியில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

நில உரிமையாளருக்கு சிறை

இதையடுத்து பாஸ்கர், பாபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி.எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக பாபு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாஸ்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தரமூர்த்தி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்