கள்ளநோட்டு அச்சடித்த 5 பேருக்கு 7 ஆண்டு சிறை

கள்ளநோட்டு அச்சடித்த 5 பேருக்கு 7 ஆண்டு சிறை

Update: 2022-09-20 18:45 GMT

கோவை

கோவையில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கள்ளநோட்டு அச்சடிப்பு

கோவை வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தடாகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவரை சாய்பாபாகாலனி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது ஆனந்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்  இருந்தன. அதை ஆய்வு செய்த போது அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது, அவர் வடவள்ளி மருதமலை ரோட்டை சேர்ந்த கிதார் முகமது (55) என்பவருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதற்காக வேலாண்டிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகளை தயாரித்தது தெரியவந்தது. எனவே அந்த வீட்டையும் போலீசார் சோதனையிட்டனர்.

7 பேர் கைது

அப்போது அந்த வீட்டில் இருந்த கத்தை, கத்தையாக கள்ள நோட்டு கள், கணினி, பிரிண்டர், இங்க், பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனந்த், கிதார் முகமதுடன், காரமடை யை சேர்ந்த சுந்தர்ராஜ் (38), திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த விஜயகுமார் (33), உதய பிரகாஷ் (33), கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஹரிகரன் (42), திருப்பூரை சேர்ந்த ராஜேஸ் (30) ஆகிய 5 பேர் கூட்டாளிகளாக செயல்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 5,927 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

இது குறித்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு கோர்ட்டில் நடை பெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, கள்ள நோட்டுகள் அச்சடித்த ஆனந்த், கிதார் முகமது, சுந்தர்ராஜ், விஜயகுமார், உதயபிரகாஷ் ஆகிய 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஜயகுமாருக்கு ரூ.7,500 அபராதமும் மற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஹரிகரன், ராஜேஸ் ஆகிய 2 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.


Tags:    

மேலும் செய்திகள்