கூட்டுறவு வங்கியில் ஊழியர்களை மிரட்டி நகை-பணம் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

கூட்டுறவு வங்கியில் புகுந்து ஊழியர்களிடம் நகை-பணம் பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-10-14 18:45 GMT

செஞ்சி, 

கூட்டுறவு வங்கி

செஞ்சி அடுத்த செம்மேடு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.

இங்கு கடந்த 9.10.2000 அன்று மதியம் 2 மணி அளவில் சென்னை கே.கே. நகரை சேர்ந்த அப்துல் மாலிக் மகன் இப்ராஹிம் (வயது 45), சென்னை ஸ்டான்லி நகரை சேர்ந்த சுந்தரம் மகன் ஹரி என்ற ஹரிகரன் (43), ராஜராஜசோழன், பிரபு ஆகிய 4 போ் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைந்து வைத்திருந்த அரிவாளை காட்டி வங்கியில் இருந்த அனைவரையும் மிரட்டினர். பின்னர், லாக்கர் சாவியை தருமாறு வங்கி செயலாளரிடம் கேட்டனர்.

நகை-பணம் பறிப்பு

உடனே, அவர் சாவி அடுத்த அறையில் உள்ளது. அதை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர், சட்டென வெளியே தப்பி சென்று கூச்சலிட்டார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வங்கியின் காசாளர் மற்றும் உதவி செயலாளர் ஆகியோர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து வங்கியின் உதவி செயலாளர் லூர்துசாமி கொடுத்த புகாரின் பேரில் இப்ராஹிம் உள்பட 4 பேர் மீதும் நல்லான்பிள்ளைபெற்றால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

2 பேருக்கு 7 ஆண்டு சிறை

இந்த வழக்கு செஞ்சி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ராஜராஜசோழன், பிரபு ஆகிய 2 போ் இறந்துவிட்டனர்.

இந்த நிலையில், வழக்கின் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் செஞ்சி சார்பு நீதிமன்ற நீதிபதி நளினகுமார் தீர்ப்பு கூறினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட இப்ராஹிம், ஹரிகரன் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்