கன்னிவாடி மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் 7 காட்டு யானைகள்

கன்னிவாடி மலையடிவார பகுதியில் 7 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2023-04-07 20:45 GMT

கன்னிவாடி மலையடிவார பகுதியில் 7 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

காட்டு யானைகள்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் சிறுத்தைகள் மலையடிவார பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை அடித்து கொல்வது அவ்வப்போது நடக்கிறது. இதுதவிர யானைகள், காட்டெருமைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய பயிர்களை சேதப்பப்படுத்தி வருகின்றன.

கன்னிவாடி மலையடிவார பகுதிகளில் தென்னை, வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. இதனால் யானைகள் அடிக்கடி கூட்டமாக வந்து தென்னை, வாழைகளை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று குட்டிகளுடன் 5 யானைகளை கொண்ட யானை கூட்டம், பண்ணைப்பட்டியை அடுத்த தெ.கோம்பையில் இருக்கும் அணை பகுதியில் முகாமிட்டுள்ளன.

விவசாயிகள் அச்சம்

இந்த 5 யானைகளும் அங்குள்ள முத்துப்பாண்டி கோவில் பகுதியில் சுற்றித்திரிகின்றன. அதை அறியாத மக்கள் நேற்று காலை முத்துப்பாண்டி கோவிலுக்கு சென்றனர். அப்போது யானைகள் திடீரென துரத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து கொண்டு தப்பி ஓடினர். அதேபோல் சின்னப்பாறை மற்றும் சிறுவாட்டுக்காடு காப்புக்காடு பகுதிகளில் தலா ஒரு ஒற்றை யானை சுற்றித்திரிகிறது.

இந்த 7 யானைகளும் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்கு வந்து விட்டால் தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை நாசம் செய்துவிடும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தோட்டக்காவலுக்கு செல்லும் விவசாயிகள், வேலைக்கு சென்றும் விவசாய தொழிலாளர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் தடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்