7 ஊர் சப்பர திருவிழா கோலாகலம்

டி.கல்லுப்பட்டி பகுதியில் 7 ஊர் சப்பரத்திருவிழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-10 21:09 GMT

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி பகுதியில் 7 ஊர் சப்பரத்திருவிழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் வரலாறு

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் ஒரு பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி தனது 6 பெண் குழந்தைகளுடன், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதிக்கு வந்தார். அவர்களை டி.கல்லுப்பட்டியில் உள்ள ராயர் மற்றும் நாயக்கர் குடும்பத்தினர் உணவளித்து தங்க இடம் கொடுத்தனர்.

அந்த காலத்தில் மூதாட்டியும், 6 பெண் குழந்தைகளும் இப்பகுதிக்கு வந்த பின்புதான் டி.கல்லுப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்ததாக நம்பப்படுகிறது.. இதனால் இப்பகுதி மக்கள் அவர்களை மிகவும் அன்போடு கவனித்து வந்தனர்.

பின்னர் வளர்ந்த பின்பு, அந்த 6 பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முயன்ற போது நாங்கள் தெய்வக் குழந்தைகள் என்றும், நாங்கள் மறையும் நேரம் வந்துவிட்டது என்றும், நாங்கள் மறைந்த உடன் எங்களது சாம்பலை எடுத்து கிராமங்களில் தூவுங்கள், நோய் நொடி மறையும், செழிப்பு உண்டாகும் என்று கூறி மறைந்து விட்டனராம். அதன்படி மூதாட்டியையும், 6 மகள்களையும் குறிக்கும் வகையில் தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும், டி.கல்லுப்பட்டியில் சரசுவதியாகவும், வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமியாகவும், அம்மாபட்டியில் பைரவியாகவும், காடனேரியில் திரிபுரசுந்தரியாகவும், கிளாங்குளத்தில் சபரியாகவும், சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாகவும் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

முத்தாலம்மன் சப்பர திருவிழா

மேற்கண்ட அம்மன்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழா முத்தாலம்மன் சப்பர திருவிழா என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆ்ண்டுக்கான விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கிராமங்களில் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மாபட்டியை தவிர்த்து பிற 6 கிராமத்தினரும் தங்களுடைய சப்பரங்களை தலைச்சுமையாக 2 கிலோமீட்டர் தூரம் அம்மாபட்டி கிராமத்துக்கு கொண்டு வந்தனர்.

ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களுடைய சப்பரங்களை தூக்கிக் கொண்டு வரும்போது சப்பரங்கள் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றது போல் இருந்தது. பின்னர் அம்மாபட்டி கிராமத்தில் பச்சைமண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முளைப்பாரி ஊர்வலம்

இதை தொடர்ந்து அனைத்து கிராமத்தினரும் தங்கள் அம்மன்களை பெற்றுக் கொண்டு அவரவர் கிராமத்துக்கு திரும்பினார்கள். தொடர்ந்து மாவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு சமூகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒற்றுமையை இந்த திருவிழாவின் மூலம் வெளிப்படுத்தினார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

திருவிழாவை முன்னிட்டு மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் துணை சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை 7 கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்