வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
தாராபுரம்
தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை திருட்டு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவரது மனைவி மீரா ராணி (வயது 53). இவர்களின் 2 மகள்களுக்கும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். தண்டபாணி கடந்த ஆண்டு இறந்து விட்டதால் மீராராணி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் மீராராணிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 மாதங்களாக கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து தாராபுரம் பாலசுப்பிரமணியபுரத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஜோடி கம்மல், 4 பவுன் நகை என ெமாத்தம் 7 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.