வீடு புகுந்து 7 பவுன் நகைகள்- ரூ.40 ஆயிரம் திருட்டு
திருச்சேறையில் வீடு புகுந்து 7 பவுன் நகைகள்-ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவிடைமருதூர்:.
உறவினரை பார்க்க சென்றனர்
கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். இவருடைய மகன் பீர்முகமது(வயது30). கடந்த 12-ந்தேதி பீர்முகமதுவின் தாயார் மற்றும் சகோதரி வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு திருச்சியில் உள்ள உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க சென்றுள்ளனர். திருச்சியில் அவர்கள் 3 நாட்கள் தங்கி உள்ளார். பின்னர் நேற்று மாலை அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
7 பவுன் நகைகள் திருட்டு
அப்போது வீட்டுக்குள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு துணிமணிகள் கீழே சிதறி கிடந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பீர்முகமது கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.