காளியம்மன் கோவிலில் 7 பவுன் நகைகள் திருட்டு
அறந்தாங்கி அருகே காளியம்மன் கோவிலில் 7 பவுன் நகைகளை திருடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே நெம்மேலிக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக பழனிவேல் உள்ளார். நேற்று முன்தினம் அம்மனுக்கு தங்க நகைகளை அணிவித்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி அய்யனார் கோவிலில் பூஜை நடத்த சென்றார். அப்போது அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த 2 வாலிபர்கள் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி ஞானவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.