நாட்டு வெடி வெடித்து 7 பேர் காயம்
இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து 7 பேர் காயமடைந்தனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்தார். இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர். இந்த இறுதி ஊர்வலத்தின் போது அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் நாட்டு வெடிகளை வெடித்து கொண்டே சென்றார். அப்போது மொத்தமாக வைக்கப்பட்டிருந்த வெடிகளில் எதிர்பாராதவிதமாக தீ பட்டதாக தெரிகிறது. இதில் அனைத்து வெடிகளும் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த கிருபை (வயது 13) அடைக்கலமேரி (50), செல்வி (39), கன்னி மேரி (55), ரஞ்சித் (15), கோவிந்தன் (50), மைக்கேல் (25) ஆகியோர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்து குறித்து ரிஷிவந்தியம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.