நாகூர், கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 7 பேரை போலீசார் கைது ெசய்தனர்.
நாகூர்
நாகூர் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்
நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்த சண்முகம் மகன் சுரேந்திரன் (வயது28), சங்கர் மகன் திலீப்குமார் (28), வெளிப்பாளையம் கூடை முடைஒர் காலனி சேர்ந்த மனோகரன் மகன் கஜேந்திரன் (45) ஆகியோர் என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 330 சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
இதேபோல் நாகூர் -ஆழியூர் சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சங்கமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த சேகர் மகன் சிவா (22), சிக்கல் காலனி தெருவை சேர்ந்த செங்குட்டுவன் சஞ்சய் (19), ஒக்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேப்பன் மகன் சத்தியசீலன் (21) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூர்
நாகூர் அருகே நேற்று மதியம் வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு வினோத் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்த முயன்றார். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். இதையடுத்து வினோத் தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை பிடிக்க விரட்டி சென்றார். அப்போது கீழ்வேளூர் அருகே உள்ள ஓர்குடி வெட்டாற்று பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி பகுதிக்கு சென்றபோது, அங்கு பணியில் இருந்த போலீசாருடன் சேர்த்து வினோத் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் ஆற்றில் குதித்து தப்பி ஓடி விட்டார். பின்னர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர் ஜீவா தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் மதன் (வயது 25) என்பதும், மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.