காப்புகாட்டில் மான் வேட்டையாடிய 7 பேர் கைது

விருத்தாசலம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் மான், காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2023-07-24 18:45 GMT

விருத்தாசலம்

தீவிர ரோந்து பணி

விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலை சாத்துக்கூடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேட்டையாடிய மான், காட்டு பன்றிகளுடன் மர்ம நபர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்துகொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்த மர்ம நபர்கள் மான், காட்டுபன்றியுடன் மோட்டார் சைக்கிள்களை நடு வழியில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வேட்டையாடினர்

பின்னர் வனத்துறையினர் மான், கட்டுப்பன்றி மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விருத்தாசலம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த குமார் மகன் அரசு(வயது 23), கண்ணன் மகன்கள் முத்து(27), விஜயகுமார்(20), கிரி, ராஜேந்திரன் மகன் சரவணன்(20), மோகன் மகன் சந்தோஷ்(19), பாலு மகன் ராசையா(21), சீனு மகன் சுரேஷ்(35), உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர்(42) ஆகியோர் விருத்தாசலம் பகுதியில் உள்ள் காப்பு காட்டில் மான், காட்டு பன்றி ஆகியவற்றை வேட்டையாடி கடத்தி வரும்போது வனத்துறையினரை கண்டதும் நடுவழியில் போட்டு விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

7 பேர் கைது

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு தப்பி ஓடிய அரசு, முத்து உள்ளிட்ட 6 பேரை தேடிப் பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சந்திரசேகரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ், கிரி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்