கிராம நிர்வாக அலுவலர் உள்பட 7 பேர் கைது

கீரனூர் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-07-03 18:51 GMT

தொழில் அதிபர் கடத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரசேகரன் (வயது 63). இவர் நேற்று முன்தினம் அதிகாலை கீரனூரில் நாஞ்சூர் பிரிவு ரோட்டில் நடைபயிற்சி சென்ற போது மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. மேலும் அவரது மகன் மணிகண்டனிடம் ரூ.70 லட்சம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது. இது தொடர்பாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அவரது தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கடத்தப்பட்ட நபரின் செல்போன் எண் சிக்னல் மற்றும் மர்மநபர்கள் பேசிய செல்போன் எண் ஆகியவற்றின் சிக்னலை வைத்து கண்காணித்து எந்த இடத்தில் உள்ளனர் என பின்தொடர்ந்து போலீசார் ஜீப்பில் விரட்டினர். இதனால் போலீசுக்கு பயந்து சந்திரசேகரை திருச்சி அருகே பெரிய சூரியூர் பகுதியில் காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினர். போலீசார் விரட்டிச்சென்று அந்த கும்பலை மடக்கினர்.

7 பேர் கைது

தொழில் அதிபர் கடத்தப்பட்ட 6 மணி நேரத்தில் அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலுக்கு மூலக்காரணமாக இருந்த களமாவூர் கிராம நிர்வாக அலுவலர் மயில்வாகனன் (38), தொழில் அதிபரின் கார் டிரைவரான கீரனூரை சேர்ந்த ராஜ்குமார் (23), குளத்தூர் லட்சுமணப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (26) மற்றும் 18, 17, 16 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரையும் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் திருச்சியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

கைதானவர்களில் மயில்வாகனன், தொழில் அதிபர் சந்திரசேரனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து காலி செய்த பின் முன்பண தொகை ரூ.11 ஆயிரத்தை அவர் திரும்பி கொடுக்கவில்லையாம். இதேபோல ராஜ்குமாருக்கு சம்பள பாக்கியும் இருந்துள்ளது. இதனால் கீரனூரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் பிரபாகரனிடம் தெரிவித்து சந்திரசேகரை கடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பிரபாகரனுக்கு அவரது உடற்பயிற்சி கூடத்திற்கு வருகை தரும் நபர்கள் உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தொழில்அதிபரை மீட்ட சம்பவத்தில் போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


வாட்ஸ்-அப் குழு அமைத்து தகவல் பரிமாற்றம்

தொழில் அதிபர் கடத்தப்பட்ட போது அவரை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார், செல்போன் கொண்டு ஒரு வாட்ஸ்-அப் குழுவினை அமைத்துள்ளனர். அந்த குழுவில் மட்டும் அத்தனிப்படையினர் தகவல் பரிமாற்றம் செய்து கடத்தல்காரர்களை விரட்டி சென்று பிடித்தனர். கைதான கிராம நிர்வாக அலுவலர் மயில்வாகனன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவரை பணியிடை நீக்கம் செய்ய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்