பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு

Update: 2022-11-25 18:45 GMT

மேட்டுப்பாளையம்

நெல்லித்துறை அருகே பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள்

கோைவ மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை அருகே குண்டுக்கல்துறை என்னும் இடத்தில் பவானி ஆறு செல்கிறது. பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தும், மற்ற நேரங்களில் ஆற்றில் தண்ணீர் குறைந்தும் காணப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவை நேரு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிரஞ்சீவி (வயது 18), சஞ்சய் (20), ரவிக்குமார் (19), பிளஸ்-1 மாணவர் மணிகண்டன் வயது (18), தனியார் நிறுவன ஊழியர்கள் சரவணன் (22), சதீஷ்குமார் (23), கணேஷ்குமார் (21) ஆகிய 7 பேரும் நெல்லித்துறை அருகே உள்ள குண்டுக்கல் துறை பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

வெள்ளத்தில் சிக்கினர்

அப்போது மாலை நேரம் இருட்டத்தொடங்கியது. ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பவானி ஆற்றின் குறுக்கே சாய்ந்துள்ள மரத்தின் மீது ஏறி நின்று கொண்டு அபயக்குரல் எழுப்பினார்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு இரவு 8:30 மணிக்கு விரைந்து சென்றனர். மேலும் குண்டுக்கல் துறைக்கு பரிசல் காரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மீட்பு

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் மற்றும் பரிசல் காரர்கள் உதவியுடன் ஆற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த 7 பேரையும் பத்திரமாக மீட்டு இக்கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி ஆற்றில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர். நெல்லித்துறை பவானி ஆற்றில் சிக்கி தவிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ரோடு மாம்பட்டி பவானி ஆற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

ேபாலீசார் மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தும் யாரும் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனை தடுக்க நெல்லித்துறை ஊராட்சி சார்பில் நெல்லித்துறைக்கு செல்லும் சாலையில் பவானி ஆற்று பாலம் அருகே சோதனை சாவடி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்