அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேர் கைது
அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தொடக்கப்பள்ளி நுழைவுவாயில் முன்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி (வயது 80) நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக பலர் வந்தனர். இதையடுத்து, அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.