ரூ.2 லட்சம் புகையிலைகளுடன் 7 பேர் கைது
ராமநாதபுரத்தில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அதிரடி சோதனை
தமிழகம் முழுவதும் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினா். இந்த சோதனையில் பண்டல் பண்டலாக புகையிலை பொருட்களுடன் காஞ்சிரங்குடியைச் சேர்ந்த வீரத்தங்கம் மகன் கதிரேசன் (வயது 55), ரெகுநாதபுரம் தங்கவேல் மகன் ராமமூர்த்தி (45), வாணி இஸ்மத் நூன் மகன் ஆசிக்அலி (37), ரெகுநாதபுரம் பாலு மகன் ராஜ்குமார் (30), பனைக்குளம் ராமசாமி மகன் சரவணன் (45) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து சுமார் 200 பண்டல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
குடோனில்...
இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் நடத்திய சோதனையில் ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் குடோன் வைத்துள்ள வைகை நகர் அப்துல் அஜீஸ் மகன் பாசித் ராஜா (45), வசந்தநகர் 1-வது தெரு சாகுல் ஹமீது மகன் தவ்பீக்கான் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 59 பண்டல் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் புகையிலை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.