சிக்கன் ரைஸ் விலையை குறைத்து கேட்டு தகராறு.. ஓட்டலை சூறையாடிய கும்பல் - 7 பேர் கைது

பண்ருட்டி அருகே ஓட்டலை சூறையாடி உரிமையாளரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலருக்கு வலைவீச்சு

Update: 2022-09-10 20:46 GMT

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டிக்கூடலூரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் பன்னீர்செல்வம் (வயது 51). இவர் அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் 2 மணியளவில் இந்த உணவகத்திற்கு பெரிய காப்பான்குளத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஓட்டல் உரிமையாளர் பன்னீர்செல்வத்திடம் சிக்கன் ரைஸ் விலையை குறைத்து கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செல்போன் செய்து அவர்களின் ஆதரவாளர்கள் 10க்கு மேற்பட்டோரை வரவழைத்தனர்.

அவர்கள் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்து கடையினுள் நுழைந்து உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தாக்கினர்.பின்னர் அங்கு இருந்த பொருட்களை அடித்து சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலிசில் பன்னீர்செல்வம் புகார் செய்தார். இதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து பெரியகாப்பான் குளத்தைச் சேர்ந்த கோபால் மகன் இளையராஜா (வயது 35), ராமு மகன் தீனா (20), ரவிச்சந்திரன் மகன் ஸ்டாலின் (21), செடுத்தான் குப்பத்தைச் சேர்ந்த முருகவேல் மகன் ராஜ்குமார் (26), சுபாஷ் (22), குறவன் குப்பம் பரத் (35), சங்கர் (37) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் 7 பேரும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை முத்தாண்டிக்குப்பம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்