பாத்திரகடையில் ரூ.7 லட்சம் திருட்டு

திருச்செங்கோட்டில் பாத்திர கடையில் ரூ.7 லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-08 17:25 GMT

எலச்சிபாளையம், செப்.9-

ரூ.7 லட்சம் திருட்டு

திருச்செங்கோடு நகரின் பிரதான சாலையான தெற்குரத வீதியில் பாத்திரக்கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் இங்கு வியாபாரம் ஜோராக நடந்து உள்ளது. இரவு கல்லா பெட்டியில் வியாபாரத்தொகை சுமார் ரூ.7 லட்சத்தை வைத்து விட்டு உரிமையாளர் கோபிநாத் கடையை பூட்டிவிட்டு சென்று உள்ளார்.

நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறந்து பார்த்தபோது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் கோபிநாத் திருச்செங்கோடு நகர போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது தொப்பி மற்றும் முகத்தை துணியால் மூடியிருந்த 2 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதும், வெளிப்புற பூட்டை உடைக்காமல் ஷட்டரை லாவகமாக இழுத்து, கடைக்கு உள்ளே ஒருவன் நுழைய வெளியே ஒருவன் காவல் இருந்து திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சங்ககிரி ரோடு ஈத்கா மைதானம் அருகே உள்ள இரும்பு கடையில் ரூ.1 லட்சம் ரொக்கம், 1½ பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பதாக கடை உரிமையாளர் செரீப் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அங்கும் சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

இங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதே நபர்கள் அதே பாணியில் பணம் மற்றும் நகையை திருடி இருப்பது தெரியவந்தது. 2 இடங்களிலும் ஒரே மாதிரி கைவரிசை காட்டிய திருடர்களை பிடிக்க திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகாலையில் நடந்த திருட்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்