கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி

கோவையில் ஜாலியாக இருக்க ஆழகான பெண்கள் இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-20 18:45 GMT

கோவையில் ஜாலியாக இருக்க ஆழகான பெண்கள் இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தமோசடி குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

கல்லூரி மாணவர்

கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இணையதளத்தை பார்த்து கொண்டிருந்தபோது, பணம் கொடுத்தால் அழகான பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்று விளம்பரம் ஒன்று வந்தது.

பெண்களின் மீது மோகத்தில் இருந்த அந்த கல்லூரி மாணவர் உடனடியாக அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்புறத்தில் இருந்து பேசிய நபர் முதலில் ரூ.2,500 செலுத்துமாறும், அதன் பின்னர் இளம்பெண்களின் புகைப்படத்தை அனுப்புவதாகவும் அதில் நீங்கள் விருப்பப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரூ.7¾ லட்சம் மோசடி

இதனை நம்பிய அந்த கல்லூரி மாணவர் ஆன்லைன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.2,500-யை அனுப்பி வைத்தார். அதன் பின்னர் கல்லூரி மாணவரை தொடர்பு கொண்ட நபர் இது அட்வான்ஸ் தொகை மட்டுமே, இதனை திருப்பி தந்துவிடுவோம். நீங்கள் விரும்பிய பெண்ணுடன் உல்லாசமாக இருக்க கூடுதல் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய கல்லூரி மாணவர் பெண்களின் மீது இருந்த மோகத்தில் பல்வேறு தவணையாக ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்தை அனுப்பியதாக தெரிகிறது.

ஆனாலும் அந்த கும்பல் கல்லூரி மாணவரை தொடர்பு கொண்டு கூடுதல் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் கல்லூரி மாணவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு

இதையடுத்து கல்லூரி மாணவர், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவரிடம் மோசடி செய்த ஆசாமிகள் கோவையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சமூகவலைத்தளங்களில் ஆசையை துண்டும் தகவலை பரப்பி பணம் அனுப்புமாறு கூறுவதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

பெண்களின் மீதான மோகத்தால் கல்லூரி மாணவர் ரூ.7¾ லட்சத்தை இழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்