தனியார் நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி
கோவை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவனம்
கோவை தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 35). இவர் அந்தப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (32) என்பவர் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.
அத்துடன் அவர் வாடிக்கையாளர்களை சந்தித்து தனது நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை வசூலும் செய்து வந்து உள்ளார். அவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யும் பணத்தை நிறுவன வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனது வங்கி கணக்கில் செலுத்தி வந்து உள்ளார்.
ரூ.7 லட்சம் மோசடி
இதற்கிடையே லோகேஸ்வரன் தனது நிறுவன வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதில் ரூ.20 லட்சம் குறைந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஜனார்த்தனன்தான் ரூ.20 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடனே அவர் தான் மோசடி செய்த பணத்தை கொடுத்து விடுவதாக கூறினார். இதை தொடர்ந்து அவர் ரூ.13 லட்சத்தை திரும்ப நிறுவனத்திடம் கொடுத்து விட்டார். மீதமுள்ள ரூ.7 லட்சத்தை கொடுக்கவில்லை.
ஊழியர் மீது வழக்கு
இது தொடர்பாக பலமுறை லோகேஸ்வரன் கேட்டும் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் அவர் வேலைக்கும் வருவதை நிறுத்திவிட்டார். அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மோசடி குறித்து லோகேஸ்வரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஜனார்த்தனன் மீது நம்பிக்கை மோசடி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.