பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு

பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர்.

Update: 2022-06-18 04:23 GMT

ஆவடி அடுத்த பட்டாபிராம் முல்லை நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பராமரிப்பாளர் நேற்று முன்தினம் இரவு பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த முத்து மாரியம்மன் சிலை, உட்சவர் சிலை, முருகன் சிலை, வள்ளி தெய்வானை சிலை ஆகிய 4 ஐம்பொன் சிலைகளையும், முத்துமாரியம்மன் கழுத்தில் போட்டு இருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை செல்லும் பிளாட்பாரத்தில் 3 பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக இருந்ததை பார்த்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் பையை அங்கேயே போட்டு விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் கோணிப்பையை பிரித்து பார்த்தபோது அதில் அம்மன் கோவிலில் திருடப்பட்ட 4 சிலைகளும், அத்துடன் பட்டாபிராம் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே தண்டுரை பகுதியில் அமைந்துள்ள ராகவேந்திரா கோவிலில் திருடப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளும் இருப்பது தெரியவந்தது. போலீசார் 7 சிலைகளையும் மீட்டு கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்