7 தலைகள் கொண்ட நாக சிலை கண்டெடுப்பு

ரிஷிவந்தியம் அருகே 7 தலைகள் கொண்ட நாக சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-03-18 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அருகே கடம்பூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையோர புறம்போக்கு நிலத்தில் நேற்று காலை மண்ணில் பாதி புதைந்த நிலையில் உலோகத்திலான 7 தலைகள் கொண்ட நாக சிலை ஒன்று இருந்தது.

இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி வருவாய்த்துறையினருக்கும், திருப்பாலப்பந்தல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் மற்றும் அரியலூர் வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 7 தலைகள் கொண்ட நாக சிலையை பார்வையிட்டு, அதனை மீட்டனர். அந்த சிலை சுமார் ஒரு அடி உயரமும், ஒரு கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இதையடுத்து போலீசார், அந்த சிலையை சங்கராபுரம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். 7 தலைகளுடன் கூடிய நாக சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதே கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி லிங்கம் மற்றும் அரை அடி உயரம் கொண்ட நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்