6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

விடுதியில் தங்கி படிக்க பெற்றோர் வற்புறுத்தியதால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-08-02 08:26 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 11). 5-ம் வகுப்பு வரை அதே கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்தான். அதே கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாக இருந்ததாகவும், இதனால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த மாதம் பொதட்டூர்பேட்டையை அடுத்த பாண்டரவேடு பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பில் பிரவீன்குமாரை பெற்றோர் சேர்த்துள்ளனர்.

இதில் மாணவன் பிரவீன்குமாருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படித்து வந்த பிரவீன்குமார் விடுமுறை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளிக்கு பிரவீன்குமாரை அவனது தாயார் செந்தாமரை அழைத்து கொண்டு பாண்டரவேட்டில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு வந்தார்.

பிரவீன் குமாருக்கு பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பஸ் ஏறி சீனிவாசபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் பிரவீன் குமார் திடீரென சேலையால் தூக்குப்போட்டு கொண்டான். வீட்டுக்கு வந்த ஏழுமலை மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஏழுமலையை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்