676 காளைகள் சீறிப்பாய்ந்தன

ஜல்லிக்கட்டில் 676 காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2023-03-21 21:01 GMT

லால்குடி:

ஜல்லிக்கட்டு

லால்குடி தெற்கு வீதி மகா மாரியம்மன் கோவிலின் 59-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர், போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், தாசில்தார் சிஸிலினா சுகந்தி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

பரிசு

ஜல்லிக்கட்டில் மொத்தம் 676 காளைகள் களம் கண்டன. அவற்றை அடக்க தலா 25 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் ெமாத்தம் 199 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். துள்ளிக்குதித்தும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். அப்போது வீரர்களை காளைகள் முட்டித்தூக்கி வீசி பந்தாடின.

இருப்பினும் காளைகளுடன் மல்லுக்கட்டி வீரர்கள் அடக்கினர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

20 பேர் காயம்

மேலும் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக காளைகளை கால்நடை மருத்துவ குழுவினரும், வீரர்களை மருத்துவ குழுவினரும் பரிசோதித்து அனுமதி அளித்தனர்.

இதில் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட செயலாளர் காத்தான், தக்காளி சிவா, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். துணை சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, கார்த்திக்கேயனி மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்