பா.ஜ.க.வினர் 65 பேர் கைது

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-11 20:11 GMT

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை

கண்டித்தும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கும்பகோணம் ஆயிகுளம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நேற்று மதியம் பா.ஜ.க.வினர் ஊர்வலமாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன், இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் 65 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்