புதுமை பெண்கள் திட்டத்தில் உதவித்தொகை பெற 6,400 மாணவிகள் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற கோவை மாவட்டத்தில் இதுவரை 6,400 மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-16 18:45 GMT


கோவை மாவட்டத்தில் புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற கோவை மாவட்டத்தில் இதுவரை 6,400 மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுமைப்பெண் திட்டம்

தமிழகத்தில் சமூநலத்துறை சார்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் திருமண உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டத்திற்கு பதிலாக அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு உள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கக்கோரி இதுவரை 5,600 மாணவிகள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பரிந்துரை

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

புதுமைப்பெண் திட்டத்திற்கு மாணவிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் கண்டிப்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் அரசு அங்கீகரித்த கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படித்திருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி 6,400 மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் விபரங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் சரிபார்க்கப்பட்டது. இதில் 700 மாணவிகளின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கலாம் என்று சமூகநலத்துறை சார்பில் அரசிற்கு பரிந்துரை செய்து உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்