ஈரோடு மாவட்டத்தில் 63 ஆயிரத்து 858 பேருக்கு ரூ.167½ கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் 63 ஆயிரத்து 858 பேருக்கு ரூ.167½ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் 63 ஆயிரத்து 858 பேருக்கு ரூ.167½ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முப்பெரும் விழா
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு மாவட்டம் வந்தார். நேற்று முன்தினம் மாலையில் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் அத்தாணி, ஆப்பக்கூடல், ஜம்பை, பவானி வழியாக ஈரோடு வந்தார். இரவு ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் ஓய்வு எடுத்த அவர், நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை சென்றார். பெருந்துறை 4 வழிச்சாலை அருகே சரளை பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா, நிறைவு பெற்ற பணிகள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக இந்த விழா நடந்தது.
முதல்-அமைச்சர் வழங்கினார்
விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.183 கோடியே 70 லட்சத்து 84 ஆயிரம் செலவில் புதிதாக தொடங்கப்பட உள்ள 1,761 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் ரூ.261 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 135 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 63 ஆயிரத்து 858 பேருக்கு ரூ.167 கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வரவேற்பு
விழாவில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நவீன சக்கர நாற்காலியை முதல்-அமைச்சர் வழங்கினார். அவர் அந்த சிறுவனிடம் பரிவோடு பேசி நாற்காலியை வழங்கினார்.
முன்னதாக ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் அவரை காண ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர். குமலன்குட்டை, திண்டல், மேட்டுக்கடை பகுதிகளில் தொண்டர்கள் உற்சாகமாக முதல்-அமைச்சரை வரவேற்றனர். பெருந்துறையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா முடிந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்பட்டு சென்றார்.